தொடர் சாலை விபத்துகள்: நெடுஞ்சாலை துறை கள ஆய்வு நடத்தியும் நடவடிக்கை இல்லை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் சாலை விபத்துகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. ECR சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சமீபத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, அதிரை நகராட்சி அலுவலகம் அருகே வார சந்தை நடத்தப்படுவது கண்டறியப்பட்டது. சமீபத்தில் இப்பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், அதிரை பேருந்து நிலையம் முதல் மல்லிப்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை வரை சாலையோர நடைபாதைகளில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது பொதுமக்கள் சாலை ஓரம் நடக்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல், ECR சாலையில் நடைமேடைகளுக்கு மேற்கூரை இல்லாததும், சாலையோர புதர்கள் அகற்றப்படாததும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கள ஆய்வு நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களின் கடும் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது.
பொதுமக்களின் கேள்விகள்:
வார சந்தை எப்போது வேறு இடத்திற்கு மாற்றப்படும்?
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
நடைமேடைகளுக்கு மேற்கூரை அமைக்கப்படுமா?
சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த கேள்விகளுக்கு பதிலளித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.