துபாய் நைஃப் பகுதி ஹோட்டல் தீ விபத்து: இருவர் பலி
துபாய்: துபாயின் மிகவும் அதிகமான தமிழர்கள் வசிக்கும் நைஃப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இன்று (சனிக்கிழமை) இருவர் உயிரிழந்துள்ளனர். துபாய் சிவில் தற்காப்பு குழுக்கள் தீயை அணைத்து கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றினர் என்றாலும், புகை மூட்டத்தால் இரண்டு பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த ஆறு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், உடனடியாக தீயை கட்டுப்படுத்தி, கட்டிடத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இருப்பினும், ஏற்கனவே பரவியிருந்த புகை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
துபாய் சிவில் பாதுகாப்பு பொது இயக்குநரகம், இந்த சோகமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
குறிப்பு: துபாயின் தமிழ் பஜார் என்றழைக்கப்படும் தேராவை ஒட்டிய நைஃப் பகுதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கும் ஒரு முக்கியமான பகுதியாகும்.