கீழத்தெரு முஹல்லா புதிய நிர்வாகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த (30.01.2026) வெள்ளிக்கிழமை, அசர் தொழுகைக்குப் பிறகு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், வரவிருக்கும் ரமலான் மாதத்திற்கான பணிகள், ஜமாஅத்தின் எதிர்கால செயல்பாடுகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முஹல்லா பொதுமக்களை ஒருங்கிணைத்து, பொது வாக்கெடுப்பு மூலம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முஹல்லா மக்களால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்து கூட்டத்தில் பாராட்டப்பட்டது. எதிர்காலத்தில் உள்ள சவால்கள் மற்றும் தடைகளை கடந்து, முஹல்லாவின் வளர்ச்சிக்காக மேலும் சீரும் சிறப்புமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முஹல்லா முன்னோடிகள், மூத்தோர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் “முஹல்லா ஒற்றுமையே நமது பலம்” என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டது.
சங்கப் பெயர் போலியாக பயன்படுத்தப்படுவது குறித்து கண்டனம் – சட்ட நடவடிக்கை அறிவிப்பு
இந்த கூட்டத்தின் பின்குறிப்பாக, நமது சங்கத்தின் பெயரை சிலர் போலியாக பயன்படுத்தி, தங்களை ஜமாஅத் போல சித்தரித்து, பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் தவறான தகவல்கள் பரப்பி வருவது குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கீழத்தெரு ஜமாஅத் கட்டிடத்தில் செயல்பட்டு வரும், முஹல்லா மக்களால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகம் தவிர, வேறு யாரேனும்
“அல் மதரஸத்துன் நூருல் முகமதியா சங்கம்” அல்லது “நூருல் முகமதியா சங்கம்” என்ற பெயர்களைப் போலியாக பயன்படுத்தி,
-
ஊர் ஓலை (நற்சான்றிதழ்) வழங்குதல்
-
திருமண பதிவு செய்தல்
-
குடும்பப் பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து நடத்துதல்
-
சங்கத்தின் பெயரில் பொருளாதார வசூல் மேற்கொள்ளுதல்
போன்ற எந்தவொரு நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், இவ்வாறு போலியாக சங்கத்தின் பெயரை பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் செயல்கள் காரணமாக ஏற்படும் இழப்புகள் அல்லது பிரச்சனைகளுக்கு, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கீழத்தெரு ஜமாஅத் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்றும், அதனால் ஏற்படும் எதிர் நடவடிக்கைகள், சங்க கட்டிடத்தில் இயங்கும் முஹல்லா ஜமாஅத் நிர்வாகத்தை கட்டுப்படுத்தாது என்றும் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக ஏற்கனவே, அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள அனைத்து ஊர் ஜமாஅத்தார்களுக்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன், இனியும் அனைத்து ஜமாஅத்தார்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
தகவல் அதிரை அப்துல் காதர்
